கருப்பு கொடி காட்டியது யார்? விசாரிக்க பழனிசாமி உத்தரவு

1

சென்னை : 'தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றபோது, தனக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய கருப்பு ஆடுகள் யார்' என விசாரணை நடத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை, தமிழகம் முழுதும் பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.




திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் அவர் பிரசாரத்துக்கு சென்றபோது, அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.



மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில், பழனிசாமியின் பிரசார பஸ் வந்தபோது, சிலர் கருப்பு கொடி காட்டினர். இதை கண்ட பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.



எனினும், அதை கண்டுகொள்ளாதது போல் இருந்தார். அதை கண்ட, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'டேய் கொடியை இறக்குடா' என ஒருமையில் ஆவேசமாக பேசினார்.



அதை கண்டுகொள்ளாமல், கருப்பு கொடி காட்டியவர்கள் அதை இன்னும் துாக்கி பிடித்தனர். உடனே பழனிசாமி, செல்லுார் ராஜுவை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, மைக்கில் பேசத் துவங்கினார்.



கடந்த மாதம், திருநெல்வேலி சென்ற பழனிசாமிக்கு, சிலர் கருப்பு கொடி காட்டினர்.
இதில் ஈடுபட்டவர்கள், குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர்.

ஆனால், மதுரையில் கருப்பு கொடி காட்டியவர்கள், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சில தலைவர்களின் துாண்டுதல் பேரில் வந்தவர்களா என, அக்கட்சியினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, இது குறித்து விசாரிக்க, கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement