ரஷ்ய ராணுவத்தில் வேலையா: எச்சரிக்கையாக இருக்க இந்தியர்களுக்கு அறிவுரை

புதுடில்லி: '' ரஷ்ய ராணுவத்தில் வேலை தொடர்பாக வரும் விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்தப் போர் துவங்கியது முதல், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து இந்தியர்கள் பலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துவிடப்பட்டனர். இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு வந்ததும், ரஷ்யாவின் அரசிடம் எடுத்துச்சொல்லி அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கட்டுமான வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் ரஷ்யா அழைத்து செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள், தங்களைப் போன்று 13 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சிலர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல் குறித்து கடந்த சில நாட்களாக மத்திய அரசு தொடர்ந்து எடுத்துக்கூறி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து ரஷ்யா அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படுவதுடன், அங்கிருக்கும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். ரஷ்ய ராணுவம் குறித்த வேலை விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
