ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே சிறுத்தை, கரடியை பிடிக்க கூண்டு

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே, கிளன்ராக் பகுதியில், சிறுத்தை, கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரில் சமீப காலமாக கரடி, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இரவு நேரங்களில் வனத்திலிருந்து நகருக்குள் வரும் விலங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள கார்டன் மந்து, கிளன்ராக் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரண்டு சிறுத்தை, கரடிகள் சுற்றி திரிகின்றன.

அதில், சிறுத்தைகள் வளர்ப்பு நாய்கள், தோடர் எருமை கன்று குட்டிகளையும் வேட்டையாடி வருகின்றன.

இரவு நேரங்களில், தாவரவியல் பூங்கா அருகே உள்ள தோடர் பழங்குடி கிராம பகுதியில் சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 'இங்கு உலா வரும் சிறுத்தை, கரடிகளை பிடித்து முதுமலையில் விட வேண்டும்,' என, வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிளன்ராக் பகுதியில், நீலகிரி வடக்கு சரக வனத்துறையினர் சிறுத்தை, கரடியை பிடிக்க நேற்று கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

Advertisement