விருதுநகர் பாண்டியன் நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர்: விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோட்டில் பாண்டியன் நகரில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் பாண்டியன் நகரை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே நீடிக்கிறது.

விருதுநகர் பகுதியில் இருந்து காரியாபட்டி, மல்லாங்கிணர், கல்குறிச்சி, பிசிண்டி, மாந்தோப்பு, அதனை சுற்றிய கிராமங்களுக்கு செல்வதற்காக மாநில நெடுஞ்சாலை பாண்டியன் நகர் வழியாக அமைக்கப் பட்டுள்ளது.

இப்பகுதி துவக்கத்தில் புறநகர் பகுதியாக இருந்ததால் குடியிருப்புகள் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை திறக்கப்பட்ட பின் பாண்டியன் நகரில் குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் மல்லாங்கிணர் ரோட்டில் உணவகங்கள், டீ கடைகள், மளிகை, இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இக்கடைகள் தங்கள் எல்லை பகுதிக்குள் நிற்காமல் கடைக்கு முன்பு தகர செட் அமைத்து ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து வருகின்றனர்.

ரோட்டில் அதிக அளவில் மண் மேவி இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்த ரோட்டில் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் போது முன்னேறி செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய ரோடாக இருப்பதால் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் ஆம்புலன்ஸ், மருத்துவ அவசரத்திற்காக செல்பவர்கள் கடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ரோட்டின் இருபுறமும் தொடரும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாண்டியன் நகர் ரோடு முடியும் இடம் வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாண்டியன் நகர் ரோடு வழியாகவே கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்காக விருதுநகருக்குள் வந்து செல்கின்றன.

அதிலும் காலையில் அரசு மருத்துவமனை ரோட்டில் வாகனங்களில் பழங்கள் விற்பவர்களும், மாலையில் பாண்டியன் நகரில் தள்ளுவண்டி இறைச்சி உணவகங்களும் ரோட்டை ஆக்கிரமித்துள்ளது.

Advertisement