சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள் * டில்லியில் உலக பாரா தடகளம் இன்று துவக்கம்

புதுடில்லி: டில்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. சொந்தமண்ணில் பதக்க வேட்டை நடத்த இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 12வது சீசன் டில்லி, நேரு மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் அக். 5 வரை நடக்கும். 104 நாடுகளில் இருந்து 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
101 ஆண்கள், 84 பெண்கள், ஒரு கலப்பு போட்டி என மொத்தம் 186 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 112 தங்கம், 96 வெள்ளி, 100 வெண்கலம் என 308 பதக்கங்கள் வென்ற 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், டில்லி போட்டியில் பங்கேற்க இருப்பதால், ஒவ்வொருவருக்கும் கடும் சவால் காத்திருக்கிறது.
தவிர உலகின் சிறந்த பாரா நட்சத்திரங்கள், நான்கு முறை பாராலிம்பிக், ஏழு முறை உலக சாம்பியன்ஷிப் தங்கம் என சாதித்த 'பிளேடு ஜம்பர்' மார்குஸ் ரேஹம் (ஜெர்மனி), 'வீல் சேர் ரேசர்' கேத்தரின் டெப்ரன்னர் (சுவிட்சர்லாந்து), அதிவேக வீரர் பெட்ருசியோ பெரைரா (பிரேசில்) திறமை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்தியா எப்படி
இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர். ஈட்டிஎறிதலில் பாராலிம்பிக் சாம்பியன், நடப்பு உலக சாம்பியன் சுமித் அன்டில், பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) இந்தியாவுக்கு தங்கம் வென்று தரலாம். தீப்தி (400 மீ.,), சச்சின் கிலாரி (குண்டு எறிதல்), சிம்ரன் ஷர்மா (200 மீ.,), சாதிக்கலாம்.

நான்காவது முறை

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆசிய மண்ணில் நான்காவது முறையாக (டில்லி) நடக்க உள்ளது. முன்னதாக, 2015ல் தோஹா (கத்தார்), 2019ல் துபாய் (எமிரேட்ஸ்), 2024ல் கோபேவில் (ஜப்பான்) நடந்தன.

பதக்க நம்பிக்கை
இந்தியா 2019ல் 9, 2023ல் 10 பதக்கம் வென்றன. 2024ல் 17 பதக்கத்துடன் பட்டியலில் 6வது இடம் பெற்றது. இம்முறை 20 பதக்கம் வென்று, பட்டியலில் 'டாப்-5' இடம் பிடிக்கும் என நம்பலாம்.

Advertisement