துரைச்சாமி நகர் நுழைவில் ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாக அகற்ற வலியுறுத்தல்

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர் நுழைவுப் பகுதியில் ஆக்கிரமிப்புகளின் ஒரு பகுதி, மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் அகற்றப்பட்டது.

மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட பகுதியில், வானமாமலை நகர், துரைச்சாமி நகர், வேல்முருகன் நகர், நமச்சிவாய நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மெயின் ரோட்டில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்ல 30 அடி அகலம் கொண்ட ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அதுவும் ஆக்கிரமிப்பால் 20 அடியாக சுருங்கிவிட்டது. நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் தினமும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நுழைவுப் பகுதியில் இயங்கிவரும் டூவீலர் டீலர் ஷோரூமால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியினருக்கும் நிறுவனத்திற்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

மாநகராட்சிக்கு சொந்தமான அப்பகுதி, குடியிருப்பில் உள்ள பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும் என அப்பகுதியினர் 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் கவுன்சிலர் அமுதா தலைமையில், துரைச்சாமி நகர் மக்கள் நலச்சங்கத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் முன்னிலையில், மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பின் ஒருபகுதி அகற்றப்பட்டது.

அரசு புறம்போக்கு தி.மு.க., கவுன்சிலர் அமுதா கூறியதாவது: இப்பகுதி வரைபடத்தின்படியும், மாநகராட்சி விதிகளின் படியும் சமுதாயக் கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 18.5 சென்ட் இடத்தை, 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றதாக அதன் உரிமையாளர் கூறுகிறார். மாநகராட்சி, ஒரு இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுகிறது எனில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் வழங்கும். அதுபோன்ற ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

மேற்கண்ட இடத்தில் டூவீலர் டீலர் கம்பெனிக்கு வாடகைக்கு விடப்பட்டு வணிகரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் கிருதுமால் நதி செல்லும் பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. கிருதுமால் நதியின் பராமரிப்பு மாநகராட்சிக்குட்பட்டது.

இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல இடநெருக்கடி ஏற்படுவதால் 10 அடி இடம் பொதுப் பயன்பாட்டிற்கு விட பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. டீலர் கம்பெனி தரப்பில் கொடுக்க மறுக்கின்றனர். ஆனால் கட்டடத்தை சுற்றியுள்ள அனைத்து இடங்களும் அரசு புறம்போக்கு நிலங்கள்.

குடியிருப்பு பகுதிக்குள் உள்ள 8 சென்ட் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். செப். 14ல் புதிய தார் ரோடு அமைக்க பூமி பூஜை நடத்திய அமைச்சர் மூர்த்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் தற்போது ஒருபகுதி அகற்றப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் உறுதி மாநகராட்சி கூட்டம் நடந்ததால் அதிகாரிகள் வராத நிலையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பின் பகுதிகள் டூவீலர் ஷோரூமின் முன் குவிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கவுன்சிலர் அமுதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது தலைமையில் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தியை சந்தித்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகளுக்கு துணைப் போவதாக குற்றம்சாட்டினர். 'அப்பகுதியில் உள்ள கிருதுமால் நதி ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற மாநகராட்சி கமிஷனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் உறுதியளித்தார்.

Advertisement