அக்டோபர்-1 புதுச்சேரி காவல் துறையின் எழுச்சி நாள் வரலாறு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே....

புதுச்சேரி காவல் துறை பிரெஞ்சு பாரம்பரியத்துடன் நீண்ட வரலாற்றை கொண்டது. ஆனால், பிரெஞ்சு ஆட்சிக்கு முன்னாள் புதுச்சேரி பகுதியில் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பாக சிறிய காவல் படை இருந்தது.
அதுவும் அந்த அமைப்பு பவர்புல்லாக தான் இருந்தது. பிரெஞ்சு ஆட்சி ஏற்பட்ட போது கூட அந்த அமைப்பினை முற்றிலுமாக கலைத்துவிடவில்லை. அதில் சில அமைப்பு முறைகளை தொடர்வதாக பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அனுமதித்தனர்.
குறிப்பாக புதுச்சேரியில் நைனார்கள் என்ற பிரிவினரும், காரைக்கால் பகுதியில் விசியதார் என்ற பிரிவினரும் அப்போதைய நிலையில் சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தனர். மேலும் விழாக்கால அணி வகுப்புகளிலும், நவாப்புகள் புதுச்சேரி பகுதிக்கு வரும்போதெல்லாம் இவர்கள் தான் வரவேற்பும், பாதுகாப்பும் கொடுத்தனர். இவர்களே வம்சாவழியாகவும் தொடர்ந்தார்கள்.
அதில் யாராவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது அவர்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டன. இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடல், தரை வழியாக வரும் உணவு பொருட்கள், பல பொருட்களுக்கு வரிவசூல் செய்து அதன் மூலம் ஊதியம் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 1768 மார்ச் 20ம் தேதி சவரின் கவுன்சில் ஆலோசனைப்படி பருந்தி, துணி, நெய், எண்ணெய், மளிகை பொருட்கள், பழங்கங்கள், காய்கறிகள் மீதும் கூட ஒரு சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. அந்த வரி வசூலில் ஒரு பகுதி நைனார்களுக்கும் வழங்கப்பட்டது.
கவர்னர் துய்ப்பிளே காலத்தில் சிறு மாற்றங்கள் செய்து இந்த காவல் அமைப்பு அப்படியே தொடரப்பட்டது. இரவு நேரத்தில் திருட்டு, கொள்ளை ஏற்படாமல் தடுக்க இவர்கள் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டனர்.
இதனுடன் சேர்த்து சிற்றுார் பாதுகாப்பிற்காக செப்பியான், அவருக்கு துணையாக பிரான்ஸ் காவலர்கள் நியமிக்கப்பட்டு கூடுதலாக பிரெஞ்சு ராணுவத்தைவிட்டு ஓடிவந்தவர்களையும், எதிரியின் ராணுவத்தை சேர்ந்தவர்களையும் கைது செய்ய இவர்களுக்கு உரிமையும் வழங்கப்பட்டது.
போக்குவரத்து சம்பந்தமாக காவல் பணிக்கும் உள்ளூரில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பின்னர் பிரவேட் இண்டியன் என்ற தலைமை அதிகாரி இரவு ரோந்து பணிக்கென்று மெர்சாஸ் என்ற தனி காவல் அமைப்பினை வைத்திருந்தார். இந்த அமைப்பின் செயல்பாட்டின் மூலமாக திருட்டு, கொலை போன்ற மிகச் சிறப்பாக தடுக்கப்பட்டன.
இதனால் இரவில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் பயமில்லாமல் போகும் சூழ்நிலை நிலவியது. பாரிஸ் மாநகரில் கூட இந்த அளவில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவில்லை என அக்காலத்தில் பாராட்டப்பட்டது.
ஒருபக்கம் இப்படி இருக்க, காரைக்கால் பகுதியில் விசியதார்கள், அதாவது குறுநிலக்கிழார்கள் தாங்களாகவே காவல் பணியினை செய்து வந்தனர். திருட்டினை கண்டுபிடிப்பது தான் அவர்களின் முக்கியமான பணியாக இருந்தது.
இவர்கள் தங்களுடைய பகுதியை மட்டும் கவனித்து வந்தனர். வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து வருவாயை பெற்றனர். இருப்பினும் இவர்களிடம் குறுகிய மனப்பான்மை காணப்பட்டது. வம்சாவழி ரீதியாாகவே செயல்பட்டனர்.
குறுநிலக்கிழார்கள் இடையே ஏற்பட்ட பூசல்களை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து சில பகுதிகளை பிரெஞ்சுக்காரர்கள் பெற்றனர்.
அதன் பிறகு 1769ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி இயற்றப்பட்ட சட்டத்தின்படி லெப்டினட் தி போலீஸ் என்பவர் காவல் துறையின் தலைவரானர். இவர் சட்டம் ஒழுங்கு கவனித்து வந்தது மட்டும் இல்லாமல் புதுச்சேரியின் சில பகுதியில் நீதி வழங்கும் பணியையும் கவனித்து வந்தார்.
அப்படியே பிரெஞ்சு ஆட்சியில் காவல் துறை பல்வேறு மாற்றங்களை கண்டது. புதுச்சேரி காவல் நிர்வாகம் 1963 செப்டம்பர் 30ம் தேதி வரை பிரெஞ்சு சட்டப்படி தான் இயங்கியது. 1963ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தான் இந்திய தண்டனை சட்டம் 1861, இதர புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டங்கள் அமலுக்கு வந்தன.
இந்த நாள் தான், புதுச்சேரி காவல் துறையின் உதய நாளாகவும், எழுச்சி நாளும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதியும் அதே உற்சாகத்துடன் எழுச்சி தினத்தை கொண்டாட புதுச்சேரி காவல் துறை தயாராகி வருகிறது.