இருவேறு விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் பலி

ராஜபாளையம்,: இருவேறு விபத்துகளில், 16 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சேத்துார் காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னையா, 75. இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி., லிங்கத்தின் சகோதரர்.
நேற்று காலை, 5:00 மணிக்கு இவரது சாலையோர இறைச்சி கடைக்குள் ராஜபாளையத்தில் இருந்து சொக்கநாதன்புத்துார் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது.
இதில், பொன்னையா, இறைச்சி வாங்க நின்றிருந்த சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ், 16, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் தலைமலை, 38, என்பவரை கைது செய்து தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்தவர் யோகராஜ், 36. அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் மூவருடன் காரில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை, 1:00 மணிக்கு மேற்கு புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் உள்ள மீடியனில் மோதி கார் கவிழ்ந்தது.
இதில், யோகராஜ் பலியானார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.