தர்மபுரி சட்ட கல்லுாரியில் தேசிய சிந்தனையரங்கம்

தர்மபுரி:''சட்ட மாணவர்கள், சட்டப்படிப்போடு இலக்கியம் தத்துவம் மற்றும் வரலாறு ஆகியவற்றையும் சேர்த்து படிக்க வேண்டும்,'' என, தர்மபுரி சட்ட கல்லுாரியில் நடந்த சிந்தனையரங்கத்தில் வணிக நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தர்மபுரியை அடுத்த மாட்லாம்பட்டி அரசு சட்டக்கல்லுாரியில், 'டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமைகள்' தற்கால மற்றும் வளரும் பிரச்னைகள் குறித்த, ஒருநாள் தேசிய சிந்தனையரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் உஷா வரவேற்றார். சேலம் வணிக நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒவ்வொருவரும் வாழ்வில் தனக்கென்று ஒரு லட்சியத்தை கொண்டிருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலை அறிந்து, சூழ்நிலைக்கேற்ப நடப்பதே உங்களை நல்ல நீதிபதியாக்கும்.

சட்டப்படிப்போடு இலக்கியம் தத்துவம் மற்றும் வரலாறு ஆகியவற்றையும் சேர்த்து படிக்க வேண்டும்,'' என்றார்.பாண்டிச்சேரி மாநில பல்கலைக்கழகத்தின் உதவிபேராசிரியர் சுபலக்ஷ்மி இணையதளத்தில் மனித உரிமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் அன்வர், கருத்து சுதந்திரம் மற்றும் தணிக்கை குறித்து உரையாற்றினார். இதில், கல்லுாரி உதவி பேராசிரியர் கண்ணப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement