கடந்த கால சம்பவங்களில் பாடம் கற்காத விஜய்: கறுப்பு தினமாக மாறிய கரூர் பயணம்

16

கோவை: திரைத்துறையின் உச்சத்தில் இருந்து அதை விட்டு, விட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று, கட்சியின் துவக்கத்தில் தெரிவித்தார் விஜய்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவது எல்லாம் எம்.ஜி.ஆர். காலத்தோடு போய் விட்டது என்றெல்லாம், பேச்சுகள் எழுந்தன.

சளைக்காமல் வந்த விஜய், தான் போகும் இடங்களில் எல்லாம் தன் பலத்தை காண்பித்து வருகிறார். ஆனால், அந்த கூட்டம்தான் இன்று அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது. முண்டியடித்து வரும் கூட்டம், விஜய்யை நேரடியாக பார்க்கத் தான் வருகிறது; அவரின் பேச்சை கேட்க அல்ல என்று தெரிகிறது.

கோவையில் தீ விபத்து இது, முதன் முதலில் தென்பட்டது கோவையில். த.வெ.க. சார்பில், முதல் பூத் கமிட்டி கூட்டம், கோவையில் நடந்தபோதே, தள்ளுமுள்ளு துவங்கி விட்டது.

போலீசார் போதிய ஏற்பாடுகள் செய்திருந்தாலும், கல்லுாரியின் நுழைவு வாயில் கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த ரசிகர்களால், களேபரம் ஏற்பட்டது.

அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஏ.சி., பெட்டியில் ஏறிய ரசிகர்களால் சிறு தீ விபத்து ஏற்பட்டது. கல்லுாரியில் இருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதிலும், பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்தனர். இதுபோன்ற கூட்டங்களுக்கு குழந்தையை அழைத்து வரலாமா என்று நிருபர்கள், அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பிய போது, எனக்கு விஜய் முக்கியம்' என்றார். பிறகு சுதாரித்துக் கொண்டு, குழந்தையும் முக்கியம்' என்றார்.

மதுரையில் மயக்கம் மதுரையில் கூட்டம் நடத்திய போது, வெயிலில் காய்ந்த தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் பலியானதற்கு பின்பும் யோசித்திருக்க வேண்டும்; யோசிக்கவில்லை.

'தொண்டர்கள் கண்ணியத்தோடு நடக்க வேண்டும்' என்று விஜய் சொன்ன பிறகும், யாரும் கேட்பதாக இல்லை.

கட்சி ஆரம்பித்து ஒரு தேர்தலை சந்திப்பதற்குள், விஜய்க்கும், த.வெ.க.கட்சிக்கும் கரூர் சம்பவம் ஒரு கரும்புள்ளி.

கரூரில் தங்காதது ஏன்? பிரசாரத்துக்கு வந்தவர்கள் உயிரிழந்ததை அறிந்தபிறகும் கரூரில் இருந்து அவர் சென்னை சென்றது ஏன், கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தோர் உறவினருக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா, அல்லது இரண்டாம் கட்ட நிர்வாகிகளையாவது அனுப்பி வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இனி, அவரது தொடர் பிரசார கூட்டம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. மறுபடியும் இதுபோல் ஒரு துயர சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் உண்டு என்பதே பலரது வலியுறுத்தலாகவும் உள்ளது.

Advertisement