வன உயிரினங்களை காக்க சிறப்பு மருத்துவமனை அமைப்பது... அவசியம் ; புலிகள் காப்பக துணை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்குமா

கம்பம்: ''வன உயிரினங்களை காக்க, காப்பகங்கள் அமைக்கப்படுவது போல் அதன் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வன உயிரின மருத்துவமனையை ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள், விவசாயிகள், வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அழிந்து வரும் வன உயிரினங்களை அழிவிலிருந்து காக்க சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி முழுவதும் புலிகள் காப்பகமாக மாற கடந்த 2021ல் ஸ்ரீவில்லிப்புத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்தனர். களக்காடு முண்டந்துறை, ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகம், தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் என விரிவடைந்து, வன உயிரின பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. குறிப்பாக சிகிச்சைக்கு வழியில்லை.

வனப்பகுதிகளில் வன உயிரினங்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு அதனால் ஏற்படும் காயங்கள், மலைக்குன்றுகள் பள்ளங்களில் சிக்கி ஏற்படும் காயங்கள், குறிப்பிட்ட ஒரு வைரசால் யானைகளுக்கு ஏற்படும் சுகவீனம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு இன்றைக்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலையே தொடர்கிறது. வனப்பகுதிக்குள் பல கி.மீ., துாரம் நடந்து சென்றுதான் கால்நடை டாக்டர்கள் வன உயிரின உடற்கூராய்வுகளை மேற்கொள்கின்றனர். மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் புலிகள் காப்பகம் பறந்து விரிந்துள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு ஒரு வன உயிரின மருத்துவமனையை தேனி மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், வன பாதுகாப்பு ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.

@block_B@ பாக்ஸ் மேட்டர்: வன உயிரின மருத்துவமனை அமைப்பதின் அவசியம் இதுகுறித்து வனத்துறையினர் சிலர் கூறியதாவது: இந்தியாவில் 2018ல் யானைகளுக்கு என, பிரத்யேக மருத்துவமனை உத்தரப்பிரதேசத்தில் மதுரா அருகில் துவங்கப்பட்டது. அங்கு, 'ஹைட்ரோ தெரபி', 'வயர்லெஸ் எக்ஸ்ரே', 'தெர்மல் இமேஜிங்' என, பல நவீன வசதிகள் உள்ளன. தமிழகத்தில் வண்டலூரில் மட்டும் மருத்துவமனை உள்ளது. வேறு எங்கும் இல்லை. வேண்டுமானால் டாக்டர்களை நியமனம் செய்யலாம். போஸ்ட்மார்டம் செய்வதற்கு தேவையான கிட் கூட ( கத்தி , ரம்பம், சிசர், கிளவுஸ், பாகங்களை வைக்க தேவையான பை மற்றும் மருத்துகள் அடங்கியது) இப்போது தான் வனச்சரக அலுவலகங்களுக்கு வந்துள்ளன. எனவே வன உயிரின மருத்துவமனை அமைந்தால் வரவேற்கத்தக்கது. இல்லாவிட்டால் தேவையான எண்ணிக்கையில் கால்நடை பட்டப்படிப்பு படித்த டாக்டர்களையாவது வனத்துறையில் நியமிக்க வேண்டும்., என்றனர்.block_B

Advertisement