தமிழகம் முழுவதும் பத்திரவுப்பதிவு இணையதளம் திடீர் முடக்கம்; பொதுமக்கள் அவதி

சென்னை: பத்திரவுப்பதிவுத்துறை இணையதளம் முடங்கியதால் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போதுள்ள 582 சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஆன்லைன் முறையை பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்றாலும் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் சிரமத்தையும் அளித்து வருகின்றன. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் பத்திரபதிவுத்துறை இணையதள சேவை முற்றிலும் முடங்கியது.

இணையதள சேவையில் நீடித்த இந்த தொழில்நுட்ப கோளாறால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். குறித்த நேரத்தில் திட்டமிடப்பட்டும், பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதி அடைந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement