டில்லி மாநில பாஜ புதிய அலுவலகம் திறந்து வைத்தார் மோடி!

புதுடில்லி: டில்லி மாநில புதிய பாஜ அலுவலகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தேசிய தலைநகரை "மினி இந்தியா" என்று புகழாரம் சூட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று டில்லி மாநில பா.ஜ., அலுவலகத்தை தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் திறந்து வைத்தார். பாஜ தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
புதிய அதிநவீன அலுவலகத்தில் மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள், கூட்ட அரங்குகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான இடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.
பாஜ அலுவலகத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
டில்லியுடனான பாஜவின் தொடர்பு ஜன சங்க நாட்களிலிருந்தே தொடருகிறது. மேலும் அது நகரத்தின் மீதான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மினி இந்தியா வாக உள்ள தேசிய தலைநகரின் பெருமையை உணர்த்தும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள் கொண்டாட வேண்டும். புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அத்தியாவசிய வீட்டுச்செலவுகளில் ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். வெளிநாட்டு பொருட்களைச் சார்ந்திருப்பதை குறைப்பது நாட்டை வலிமையாக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.