தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலை

சூளகிரி, சூளகிரி அருகே, தனியார் பேப்பர் மில் மேற்பார்வையாளர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி அருகே, கங்கசந்திரத்தை சேர்ந்தவர் அம்ரீஷ், 30. கோபசந்திரத்திலுள்ள தனியார் பேப்பர் மில்லில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.


இவரது மனைவி அம்பிகா, 25. திருமணமாகி, 5 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், காருபாலா டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில், அங்கொண்டப்பள்ளி, ஆருப்பள்ளியை சேர்ந்த, 2 வாலிபர்களை, அம்ரீஷ் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும், மருத்துவமனை சிகிச்சைக்கு பின் திரும்பினர். இச்சம்பவத்தால், அம்ரீஷ் மற்றும் வாலிபர்களுக்கு முன்விரோதம் இருந்தது.


நேற்று மாலை, 6:00 மணிக்கு காருபாலா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு அம்ரீஷ் சென்றார். அங்கு வந்த, 5 பேர் கொண்ட கும்பல், அவரை கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியது. சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்னை நடந்த, அதே காருபாலா டாஸ்மாக் கடை அருகே தான், அம்ரீஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால், அவரால் கத்தியால் குத்தப்பட்டு முன்விரோதத்தில் இருந்த வாலிபர்கள், அம்ரீஷை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. சூளகிரி இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா தலைமையிலான தனிப்படையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement