'வாடகையா விற்பனையா' இதற்கு ஒரு ஆலோசகர்

சென்னை: சென்னையில் மூன்று இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, அடுக்குமாடி வளாகங்களில், அலுவலக இடங்களை, வாடகைக்கு விடுவதா, விற்பனை செய்வதா என முடிவு செய்து, அதற்கான வழிமுறைகள் வகுக்க, கலந்தாலோசகர் தேடும் பணியை, வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளை, வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, வணிக ரீதியாக முக்கியத்துவம் உள்ள பகுதிகளில், அடுக்குமாடி அலுவலகங்கள் கட்ட வாரியம் முடிவு செய்தது.
அதன்படி, சென்னை அரும்பாக்கத்தில், இரண்டு அடித்தளம், தரைதளத்துடன், 11 மாடி அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒரு தளத்தில், 29,820 சதுர அடி வீதம், 3.57 லட்சம் சதுர அடி இடம் விற்பனைக்கு தயாராக உள்ளது. சென்னை பீட்டர்ஸ் காலனியில், 3 அடித்தளம், தரைதளத்துடன், 17 மாடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், 8.10 லட்சம் சதுர அடி அலுவலக இடம், விற்பனைக்கு தயாராக உள்ளது. அசோக் நகரில் தரைதளத்துடன், 3 மாடி வளாகத்தில், 74,000 சதுர அடி இடம், விற்பனைக்கு தயாராக உள்ளது.
இந்த அலுவலக இடங்களை, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்க வாரியம் முடிவு செய்துள்ளது. அதில் எவ்வளவு இடங்களை, எந்த முறையில் விற்பது, எவ்வளவு இடங்களை வாடகைக்கு அல்லது குத்தகை முறையில் ஒதுக்குவது என்பதை முடிவு செய்யவும், அதற்கான வழிமுறைகள் உருவாக்கவும், வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு தொழில்நுட்ப மற்றும் சந்தை நிலவர வழிமுறைகள், ஆலோசனைகள் வழங்க, தொழில்முறை கலந்தாலோசகர்களை நியமிக்க, வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ளது.