விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை: சொல்கிறார் திருமா

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு, அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று நம்புகிறேன். விஜய் இதுவரை அந்த வழக்கில் எப்ஐஆரில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கிற போது அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. அவருக்கு இதில் வேறு கையில் தொடர்பு இருக்கிறது என்று அரசு கருதினால், போலீசார் கருதினால் சட்டப்பூர்வமாக அவர்கள் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
திட்டமிட்டே திமுகவுக்கு எதிரான, திமுக அரசுக்கு எதிரான வெறுப்பை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. ஆறுதல் சொல்வதற்கு அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது, கடமை இருக்கிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தது மகிழ்ச்சி. ஆனால் பாஜ இந்த பிரச்னையில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்கிற விமர்சனமும் இருக்கத்தான் செய்கிறது. விசாரணை தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை போன்றோர அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்தார்கள் என்பதால் இந்த விமர்சனங்கள் இருக்கிறது.
அரசு இந்த சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. வழக்கும் பதிவு செய்து புலனாய்வு விசாரணையை தொடங்கி இருக்கிறது. விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் நீதித்துறையை அரசுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினர் அணுகி இருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். நீதித்துறை நிதானமாக கையாளும் என்று சொல்லி இருப்பதே சரி என்றே கருதுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
@block_G@
இது குறித்து சமூக வலைதளத்தில் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜ. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
பாஜவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.
ராகுல் இது தொடர்பாக தமிழகம் அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.block_G











