ஜி.டி.பி., 6.50% வளர்ச்சி பெறும் ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

புதுடில்லி, இந்திய பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 6.50 சதவீத வளர்ச்சி பெறும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கை கூறியதாவது:
இந்திய பொருளாதார வளர்ச்சி, 6.50 சதவீதத்துக்கு மேல் பதிவாக வாய்ப்பிருந்த நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், அதற்கான சூழல் மாறியுள்ளது.
கடுமையான வரி விதிப்பால், ஏற்றுமதி குறைந்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஜி.டி.பி.,யில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி வீதம் குறையும் என்பதால், ஓராண்டில் வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும்.
கடந்த ஏப்ரலில் வெளியான கணிப்பில், 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டது. தற்போது அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகள் காரணமாக, அரை சதவீத அளவுக்கு இந்திய ஜி.டி.பி., வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்., முதல் ஜூன் வரை, இந்திய பொருளாதார வளர்ச்சி 7.80 சதவீதமாக பதிவானது. அமெரிக்க வரி விதிப்பால், வளர்ச்சி விகிதம் மேலும் சரிய வாய்ப்பிருந்த நிலையில், ஜி.எஸ்.டி., குறைப்பால் நுகர்வு அதிகரித்து வருவது சரிவைத் தடுத்து தாங்கி பிடிக்கும். எனவே தான் அரை சதவீத சரிவுடன் 6.50 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.