ஸாவென் தர்ஸ்டே சிக்ஸ் ஹரேன்த்ரா சிக்ஸ்டி = ரூ.7,616

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 7,616 ரூபாய்க்கு ஆங்கிலத்தில் எழுதி தந்த வங்கி காசோலையில், வார்த்தைக்கு வார்த்தை பிழைகள் இருந்ததால் அது திருப்பி அனுப்பப்பட்டது.
ஹிமாச்சலின் சிர்மோரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், மதிய உணவு திட்ட பணியாளருக்கு 7,616 ரூபாய்க்கான காசோலையை, ஆங்கிலத்தில் எழுதி செப்., 25ல் வழங்கினார்.
காசோலையில், தொகையை எழுத்தில் குறிப்பிடுகையில், ஏழு என்பதை ஆங்கிலத்தில், 'ஸாவென்' என்றும், ஆயிரம் என்பதை, 'தர்ஸ்டே' என்றும், நுாறு என்பதற்கு, 'ஹரேன்த்ரா' என்றும் எழுதி உள்ளார். இறுதியாக, 16 என்பதற்கு, 'சிக்ஸ்டி' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த காசோலை வங்கி தரப்பில் இருந்து நிராகரிக்கப்பட்டது. அதன் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது.
'யாரோ எழுதி தந்த காசோலையை படித்து பார்க்காமல் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டு தந்தாரா' என பலர் கேள்வி எழுப்பினர். 'பல இடங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலை இது தான்' என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சிலர், 'காசோலை நிராகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டே எழுதப்பட்டதாக கூட இருக்கலாம்' என, கிண்டல் செய்துள்ளனர்.






