ஆபத்தான கால்வாய் பாலம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் ஆபத்தான வகையில் உள்ள சேதமடைந்த கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதி செந்தில்குமார் கூறியதாவது: இங்கு நிலையூர் கால்வாயில் இருந்து மேலக்கால் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் உள்ளது. விவசாயம், மயானத்திற்கு செல்ல வசதியாக கால்வாய் மீது பல ஆண்டுகளுக்கு முன் கல்பாலம் கட்டப்பட்டது. போதுமான பராமரிப்பு இன்றி வலுவிழந்து, அவ்வப்போது இடிந்து விழுகிறது.
இப்பகுதியில் பல நுாறு ஏக்கரில் தென்னை, நெல் விவசாயம் நடக்கிறது. டிராக்டர், கதிரறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றன. பாலம் மோசமாக சேதமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விபரீதம் ஏற்படலாம். ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய பாலம் அமைக்க வேண்டும் என்றார்.