15 சீட் கொடுத்தால் போட்டி, இல்லையென்றால் ஆதரவு மட்டும் தருவோம்: முறுக்குகிறார் ஜிதன் ராம் மஞ்சி

பாட்னா: பீஹாரில் அடுத்தமாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 15 சீட் கொடுத்தால் போட்டியிடுவோம், இல்லையென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை தருவோம் என்று இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.

பீஹாரில் நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதை தொடர்ந்து, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆர்ஜேடி தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக இறங்கி உள்ளன.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி கூறியதாவது:

எங்களுக்கு 15 தொகுதிகளில் போட்டியிட சீட் கொடுத்தால் போட்டியிடுவோம். இல்லையென்றால் போட்டியிட மாட்டோம் என்றும், ஆதரவை அளிப்போம் கூட்டணியில் தொடருவோம். ஒரு கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான இடங்கள் எங்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.

மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் போட்டியிட தயாராக இல்லை, என்டிஏவை ஆதரிப்போம். நான் முதல்வர் ஆக விரும்பவில்லை. எங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இவ்வாறு ஜிதன் ராம் மஞ்சி கூறினார்.

ஜிதன் ராம் மஞ்சியை சமாதானப்படுத்த பாஜ தலைவர் ஜே.பி. நட்டா, அவருடன் பேசியுள்ளார்.

Advertisement