லாலு கட்சி எம்எல்ஏ.க்கள் இருவர் ராஜினாமா: ஆர்ஜேடி.யில் அதிர்ச்சி

பாட்னா: பீஹார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக,ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) எம்எல்ஏ.க்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சிக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் வரும் நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் பீஹாரில் ஆளும் தேஜ கூட்டணியும், எதிர்கட்சியான மகாபந்தன் கூட்டணியும் தேர்தல் பணிகளில் தீவிரமாகி உள்ளன.
இந்த வேளையில், லாலுகட்சியின் ஆர்ஜேடியின் எம்எல்ஏக்களான நவடா தொகுதியின் விபா தேவி, ரஜவ்லி தொகுதியின் பிரகாஷ் வீர் ஆகியோர் தங்களின் ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவிடம் ஒப்படைத்தனர். ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லி சென்றுள்ள நிலையில் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் கட்சிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் நிகழ்வு, கட்சிக்குள் ஒற்றுமை ஏற்படுத்துவதில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதிலும் ஏற்கனவே சவால்களை எதிர்கொண்டுள்ள ஆர்ஜேடி கட்சிக்கு பிரச்சனைகளை மேலும் அதிகரித்துள்ளது. செல்வாக்கு மிக்க இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பீஹார் தேர்தலில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.