குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம் வேலுாரில் படகுகளில் மக்கள் மீட்பு

வேலுார்: வேலுாரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலுார் மாநகராட்சி, நான்காவது மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டையில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில வாரங்களாக வேலுாரில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கன்சால்பேட் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மழைநீர் வெள்ளம் தேங்கியதால், பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர்.

நேற்று, வேலுார் தீயணைப்பு துறையினர், 44 குடும்பங்களை சேர்ந்த, 164 பேரை வெள்ளத்தில் இருந்து ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்கள், மாநகராட்சி சார்பில், மக்கான் உருது பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.

மக்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். நிக்கல்சன் கழிவுநீர் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக துார்வாரவில்லை. எங்கள் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement