ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி., சான்று; அமைச்சர் தகவல்
ஈரோடு, ந ஈரோடு, ரங்கம்பாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டப்பட்டு வரும் கல்லுாரி மாணவர் விடுதியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: இங்கு, 9.73 கோடி ரூபாயில் கல்லுாரி மாணவர்கள், 150 பேர் தங்கும் வகையில் நவீன விடுதி கட்டப்பட்டு வருகிறது. 6 மாணவர்களுக்கு ஒரு 'டார்மென்டரி' (பலர் தங்கும் அறை) ஒரு கழிப்பறை, ஒரு குளியலறையுடன் கட்டப்படுகிறது. பழைய விடுதிகளில் பொது கழிப்பிடம், குளியலறையாக இருக்கும். இங்கு அவ்வாறு இல்லை. ஒவ்வொரு அறைக்கும் ஒரு பால்கனி, 4 புறமும் இடம் விட்டு காற்றோட்ட வசதி, பொது சாப்பிடும் அறை, லைப்ரரி, வைபி வசதியுடன் கம்ப்யூட்டர் இணைப்பு, கேரம், டேபிள் டென்னீஸ், செஸ் ஆகிய விளையாட்டுக்கான அரங்கம் உள்ளது. இங்கு கூடுதல் கட்டடம் தேவை எனில், 17 கோடியில் கட்டப்படும். ஈங்கூரில் தாட்கோ தொழிற்பேட்டையில் பராமரிப்பு பணி குறித்து ஆய்வு செய்து, தாட்கோ மூலம் முழுமையான பணி செய்து, ஆதிதிராவிடர்கள் தொழில் துவங்க வழி செய்யப்படும்.
கடனுதவி தரப்படும்.
மலைப்பகுதி குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளி சென்று வரவும், பாதுகாப்புக்காக இலவசமாக அப்பள்ளிகளுக்கு 'போர்ஸ்' என்ற ஜீப் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு, 4 ஜீப் வழங்கி உள்ளோம். கூடுதலாக வாகனங்கள் கேட்டுள்ளனர். ஆய்வுக்கு பின் வசதி செய்து தரப்படும். ஈரோடு மாவட்ட மலைப்பகுதி மலையாளி பழங்குடி மக்கள், எஸ்.டி., சான்று கோரி உள்ளனர். இதுபற்றி மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளது.
பதிலுக்காக காத்துள்ளோம். வனவிலங்குகள் உரிமைச்சட்டப்படி, மலைப்பகுதியில் வாழ்மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை, நேரடி ஆய்வில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிக்கு ஆண்டு தோறும், சாலை, குடிநீர் மேல்நிலைத்தொட்டி, பல்நோக்கு சமுதாய மையம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அன்புமணி, சீமான் போன்றோர் சமூக நீதி எங்குள்ளது என கேட்கின்றனர். அதுபோன்றவர்கள், இந்த விடுதி கட்டடத்தை பார்த்துவிட்டு பேசட்டும். கார்பரேட் நிறுவன கட்டடம் போல கட்டி, மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். இவ்வாறு கூறினார்.