சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் சொத்துகள் முடக்கம்: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

5

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட செயலியை அறிமுகப்படுத்தியது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ்ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.54 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.


நம் நாட்டில் சட்டவிரோத சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. 'மொபைல் போன்' புழக்கத்துக்கு பின், சூதாட்ட செயலிகள் அதிகரித்துள்ளன. இந்த செயலிகள், மக்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை முடுக்கிவிட்டுள்ளது.

அந்த வகையில், '1 எக்ஸ் பெட்' என்ற சூதாட்ட செயலி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்த செயலியை விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள், விளம்பரத்தின் போது, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்றது குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த செயலியை விளம்பரப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.14 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துகளும், ஷிகார் தவானின் ரூ.4.50 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement