எறும்புகளுக்கு பயப்படும் வினோத மனநோய்; தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை

சங்காரெட்டி: எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றிய விவரம் வருமாறு;

தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமின்பூரில் ஸ்ரீகாந்த் தமது மனைவி மணிஷா(25) உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகள் உண்டு.

மணிஷாவுக்கு எறும்புகளை கண்டால் பயப்படும் ஒருவிதமான மன நோய் ( Myrmeco phobia- மைர்மெகோ போபியா) பாதிப்பில் இருந்து வந்துள்ளார். இதில் இருந்து அவரை குணப்படுத்த மணிஷாவின் குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சித்தனர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிக்சைக்கும் ஏற்பாடு செய்தனர்.

மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமானதே தவிர, மணிஷாவை பீடித்திருந்த மன நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட, அவரது குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.

இந் நிலையில், கணவர் எப்போதும் போல் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு மணிஷா தற்கொலை செய்துகொண்டார். அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பிய ஸ்ரீகாந்த், படுக்கை அறை உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததை கண்டார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்கு சென்றனர். விசாரணையின் போது மணிஷாவின் சடலம் அருகில் ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதம் கணவருக்கு எழுதப்பட்டு இருந்தது. அதில், என்னை மன்னிக்கவும். எறும்புகளுடன் என்னால் இனி வாழமுடியாது. நம் மகளை கவனித்துக் கொள்ளுங்கள். 1116 ரூபாயை அன்னவரம் மற்றும் திருப்பதி உண்டியலுக்கு செலுத்தி விடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(தற்கொலை என்பது எப்போதும் தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ மீண்டு வர சினேகா, தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.)

Advertisement