மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்ளக்கூடாது: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை

5


புதுடில்லி: ''மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு,'' என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.


ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள பல்கலை பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அவர் பேசியதாவது: சரியான கல்வி மற்றும் திறன்கள் இருந்தால் நமது இளைஞர்கள் மகத்தான சாதனை படைப்பர். புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய , சமத்துவம், நீதியுடன் கூடிய வளர்ந்த பாரதத்தின் உந்து சக்தியாக அனைவராலும் மாற முடியும்.


தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கல்வி சிறப்பு முக்கியம் என்றாலும், மாணவர்கள் இன்னும் அவசியமான மாண்புகள் மற்றும் குணாதிசயங்களை கொண்டிருப்பது முக்கியம். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது சிறந்த செயல்திறனை பதிவு செய்துள்ளன.

54 பல்கலைகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடக்கூடாது. இன்றைய உலகில் வாய்ப்புகள் மகத்தானவை. ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு.

இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Advertisement