குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி தண்டையார்பேட்டை சிறுமி பலி தண்டையார்பேட்டையில் சோகம்

சென்னை: குப்பை லாரியின் சக்கரத்தில் சிக்கி, 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், தண்டையார்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தண்டையார்பேட்டை, கைலாசம் நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரளா. தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மகள் காவியா, 8; தண்டையார்பேட்டை, சோலையப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால், ஆசிரியர்கள் சிறுமியை வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியை வெங்கடேசனின் உறவினர் ஜனனி, 17 என்பவர், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஸ்கூட்டரின் முன்புறம் 'காஸ்' சிலிண்டரையும், பின்புறத்தில் சிறுமியையும் அமர வைத்து சென்றார்.

தண்டையார்பேட்டை, புறநகர் மருத்துவமனை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் நிலை தடுமாறியதில், ஸ்கூட்டருடன் ஜனனி ஒருபுறமும், சிறுமி மறுபுறமும் சாலையில் விழுந்துள்ளனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரியின் சக்கரம், சிறுமியின் தலை மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே காவியா உயிரிழந்தார்.

இதை பார்த்து பதறிய அப்பகுதிமக்கள், குப்பை லாரி ஓட்டுநரான கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ், 35, என்பவரை, பிடித்து நையப்புடைத்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குப்பை லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement