மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்

3

சென்னை: பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை எடுத்து வரப்பட்ட நுரையீரல், மீனம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.,க்கு மெட்ரோ ரயிலில் நேற்று, பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் தரப்பட்ட நுரையீரல், சென்னை மெட்ரோ ரயிலில் முதல் முறையாக எடுத்து வரப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக நுரையீரலை எடுத்து வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2:07 மணிக்கு, மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர்.

பின், சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக்குழுவினர் மெட்ரோ ரயிலில் ஏறி, ஏழு நிலையங்களை கடந்து, 2:28 மணிக்கு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர்.

அங்கிருந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Advertisement