ரேஷன் கடைகளில் 'சானிட்டரி நாப்கின்' மானிய விலையில் வழங்க கோரி வழக்கு; அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: 'ரேஷன் கடைகளில், 'சானிட்டரி நாப்கின்'களை மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்க கோரிய மனுவுக்கு, டிசம்பர் 16ம் தேதிக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால், சுகாதார துறை உள்ளிட்ட மூன்று துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:
மாதவிடாய் காலங்களில், பெண்கள் சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமானது.
'சானிட்டரி நாப்கின்'களின் அதிக விலை காரணமாக, ஏழை பெண்களுக்கு 'நாப்கின்'கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், சுகாதார குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
பள்ளிகளில் இலவச மாக, 'நாப்கின்'கள் வழங்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.
எனவே, தமிழகத்தில் ரேஷன் கடைகளில், 'சானிட்டரி நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தபோது, அதுபோல எந்த திட்டமும் இல்லை என, பதிலளிக்கப்பட்டது.
எனவே, ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ , சானிட்டரி நாப்கின்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க, அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கியும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
'எனவே, டிச., 16ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில் சமூக நலத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும்' என, உத்தரவிட்டனர்.
மேலும்
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
-
கோயில்களில் சிவராத்திரி பூஜை