அரசு நில மோசடி வழக்கில் அஜித் பவாரின் மகனுக்கு தொடர்பில்லை; விசாரணை குழு அறிக்கை

மும்பை: அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித பவாரின் மகனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் துணை முதல்வராக தேசியவாத காங்., தலைவர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு புனேவில் உள்ள, அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் விதிகளை மீறி விற்கப் பட்டுள்ளது. சுமார், 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், வெறும் 300 கோடி ரூபாய்க்கு கைமாறி இருக்கிறது.
இந்த நிலத்தை, வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் பார்த் பவார் எழுதி வாங்கி இருப்பதாகவும், துணை முதல்வரின் மகன் என்பதால் பத்திரப்பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், பத்திரப்பதிவு துணை ஆய்வாளர் ராஜேந்திர முதே தலைமையிலான குழு அமைத்து துறை ரீதியான விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டார். மேலும், கூடுதல் தலைமை செயலர் விகாஷ் கார்கே தலைமையில் உயர்மட்ட விசாரணை கமிட்டியையும் அமைத்திருந்தார்.

இந்த நிலையில், முதே தலைமையிலான விசாரணை கமிட்டி நேற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 'நிலம் விற்பனை தொடர்பான எந்த ஆவணங்களிலும் துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவாரின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது,' என தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது; இந்த நில மோசடி விவகாரத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்ட புனே துணை பதிவாளர் ரவீந்திர தாரு உள்ளிட்டோர் நேரடியாக இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பார்த் பவானி வர்த்த பார்ட்னர் மற்றும் உறவினருமான திக்விஜய் பாட்டில், ஷீத்தல் தேஜ்வானி ஆகியோர் மீது புனே போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வருவாய் துறை மற்றும் தீர்வு ஆணையர் ஆகியோர் நடத்திய விசாரணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும். இந்த 3 அறிக்கைகளும், விகாஷ் கார்கே தலைமையிலான உயர்மட்ட விசாரணை குழுவினர் வழங்கப்படும். மேலும், இனி வரும் காலங்களில் மோசடி நடப்பதை தடுக்கும் விதமாக, அரசு சொத்துக்களின் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement