பருவநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்பாடு; இந்தியாவுக்கு 10 இடங்கள் சரிவு

புதுடில்லி: பருவநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்பாடுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 10 இடங்கள் பின்தங்கிய இந்தியா, உலகளவில் 23வது இடத்தை பிடித்துள்ளது.

ஐநா பருவநிலை மாநாட்டில் ஜெர்மன்வாட்ச், நியூகிளைமேட் இன்ஸ்டிடியூட் மற்றும் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் ஆகிய 3 அமைப்புகள், பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு தரவரிசையை கூட்டாக வெளியிட்டது. 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில், பருவநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகளைப் பொறுத்து, ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 10 இடங்கள் பின்தங்கி, 61.31 புள்ளிகளுடன் 23வது இடத்தை பிடித்துள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்காததும், புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் விடுதலை தொடர்வதாலும் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உயர் செயல் திறன் கொண்ட நாடாக இருந்த இந்தியா, இந்த முறை நடுத்தர செயல்திறன் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான போதுமான நடவடிக்கைகளை எந்த நாடுகளும் மேற்கொள்ளாததால் முதல் 3 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 4வது இடத்தில்
டென்மார்க் 80.52 புள்ளிகளுடனும், 70.8 புள்ளிகளுடன் பிரிட்டன் 5வது இடத்திலும், 70.75 புள்ளிகளுடன் மொரோக்கோ 6வது இடத்திலும் உள்ளன.

சவுதி அரேபியா 11.9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா முறையே 14.33 மற்றும் 21.84 புள்ளிகளுடன் 66வது மற்றும் 65வது இடங்களில் உள்ளன.

Advertisement