பழைய இ.சி.ஆர்., சாலை பராமரிப்பு :தமிழக நெடுஞ்சாலை துறை ஏற்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை, தொடர் பராமரிப்பிற்காக, நெடுஞ் சாலைத் துறை ஏற்றுள்ளது.

சென்னை - புதுச்சேரி இடையே, 60 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலை இல்லை. சென்னை - மாமல்லபுரம் சாலை, மாமல்லபுரம் - புதுப்பட்டினம் சாலை என, வெவ்வேறு பகுதிகள் இடையே, குறுகிய துாரத்திற்கே சாலைகள் இருந்தன.

கடந்த 1970க்குப் பின், குறுகிய துார சாலைகளை இணைத்து, புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையும், 25 ஆண்டுகளுக்கு முன், ஒருவழிப் பாதையாக, நெடுஞ் சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அனைத்து இடங்களிலும், உட்புற பகுதியில் தான் சாலை கடந்தது. நாளடைவில், கடலோர போக்குவரத்து மேம்பாடு கருதி, 1998ல் இருவழித் தடமாக சாலை மேம் படுத்தப்பட்டது.

அப்போது, மாமல்ல புரம், பூஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், உட்புற சாலையை தவிர்த்து, புதிதாக புறவழிப்பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், நெடுஞ்சாலைத் துறையிடமே சாலை இருந்தது.

பின்னர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம், சாலை ஒப்படைக்கப்பட்டது.

இந்நிறுவனம், சர்வதேச தரத்திற்கு சாலையை மேம்படுத்தி, கடந்த 2002 முதல், சுங்க கட்டண சாலையாக நிர்வகித்தது. தேவனேரியில் புறவழிப்பாதை அமைத்தது.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் உட்புறத்தை தவிர்த்து, புறவழிப்பாதை அமைக்க முயன்றது.

சாலை வெளியே அமைந்தால் வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கருதி, வியாபாரிகள் எதிர்த்ததால், பாலங்கள் கட்டியும் சாலை அமைக்கவில்லை.

ஆனாலும், தற்போதைய போக்குவரத்து கருதி, கடந்த 2020ல் புறவழி அமைக்கப்பட்டது.

இச்சூழலில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி, கடந்த 2018ல், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது.

'நகாய்' எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பூஞ்சேரி, இளையனார்குப்பம், புதுப்பட்டினம், வாயலுார், காத்தங்கடை, கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், பழைய தடத்தை முற்றிலும் கைவிட்டு, வேறு இடத்தில் புதிய தடமாக அமைக்கிறது.

இந்நிலையில், பழைய சாலை கடந்த சில ஆண்டு களாக பராமரிக்கப்படவில்லை.

இதனால், சாலை பள்ளங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், முழு நீள சாலையையும் 'நகாய்' நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாகவும், இச்சாலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்து, பராமரிப்பை தவிர்த்தது.

உள்ளூர் வாகனங்கள் செல்ல, சாலையை பராமரிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், மாமல்லபுரம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை, தொடர் பராமரிப்பிற்காக, தமிழக நெடுஞ்சாலைத் துறை ஏற்றுள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், 'மாமல்லபுரம் அருகே புதுப்பட்டினம், கூவத்துார் போன்ற இடங்களில் சாலை பெயர்ந்துள்ளதால், வண்டி ஓட்ட சிரமப்படுகிறோம். உள்ளூர் வண்டிகள், பழைய சாலையில் தான் செல்ல வேண்டும். இந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும்' என்றனர்.

@block_B@

சிக்கல்

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் கூறியதாவது: அக்கரை - மாமல்லபுரம் வரை தான், கிழக்கு கடற்கரை சாலையாக, எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் - புதுச்சேரி வரை, தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பல இடங்களில், பழைய சாலையை தவிர்த்து, புதிதாக அமைக்கப்படுகிறது. பழைய சாலையை எந்த துறை பராமரிப்பது என சிக்கல் ஏற்பட்டது. அந்தந்த பகுதி பழைய சாலையை, தற்போது தமிழக நெடுஞ்சாலைத் துறை ஏற்றுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.block_B

Advertisement