விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்; சேலம் பெண் சுட்டு கொலை

பசவேஸ்வராநகர்: தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 40. இவரது மனைவி புவனேஸ்வரி, 39. இவர்களுக்கு 12 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனர். பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ஐ.டி.,நிறுவனத்தில் கணவரும், தனியார் வங்கியில் மனைவியும் பணியாற்றினர்.

புவனேஸ்வரி நடத்தையில் பாலமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவரை விட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, புவனேஸ்வரி பிரிந்தார். மகன், மகளுடன் சோலுார்பாளையாவில் வசித்தார். தான் வேலை செய்த வங்கியின் பசவேஸ்வராநகர் கிளையில் பணியாற்றினார்.

கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து கொடுக்க பாலமுருகனுக்கு விருப்பம் இல்லை. கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடந்த, விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில் நேற்று, வேலை முடிந்ததும், புவனேஸ்வரி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்த பாலமுருகன், துப்பாக்கியை எடுத்து சுட்டார்.

உயிருக்கு போராடியவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

நேராக மாகடி ரோடு போலீஸ் நிலையம் சென்று, பாலமுருகன் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement