உணவு துறை அதிகாரிகள் அதிரடி; 25 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கோலார்: கோலாரின் மணிக்கூண்டு அருகே, வாகனங்களுக்கு சட்டவிரோதமாக சமையல் காஸை எரிப்பொருளாக பயன்படுத்தியதை கண்டிபிடித்த உணவுத்துறை அதிகாரிகள், 25 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
சமையல் காஸை, சட்ட விரோதமாக வாகனங்களுக்கு எரிப்பொருளாக பாதுகாப்பின்றி, 'ரீ பில்லிங்' செய்வதாக கோலார் தாலுகா உணவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோலார் கிராமப்புற தாலுகா உணவுத்துறை இன்ஸ்பெக்டர் சி.வி., மஞ்சுநாத் தலைமையில் சோதனை நடத்தியதில் வீட்டுக்கு பயன்படுத்தும் சமையல் காஸ்
சிலிண்டர்களை உரிய உரிமமும், பாதுகாப்பும் இல்லாமல் வாகனங்களுக்கு, ரீ பில்லிங் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பயன்படுத்திய, 25 காஸ் சிலிண்டர்கள், இரண்டு காஸ் நிரப்பும் பம்புகள் மற்றும் இரண்டு மின்னணு எடை இயந்திரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
உணவுத்துறை அதிகாரிகள் கோலார் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சட்டவிரோதமாக சமையல் காஸ் விற்பனை செய்ததாக ஜுபியர், 40, என்பவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.