'டில்லிக்கு வந்தாலே அலர்ஜி': மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

2

புதுடில்லி: ''டில்லியில் இரண்டு நாட்கள் கூட தங்க முடியவில்லை; காற்று மாசு மோசமாக உள்ளதால், உடனடியாக நோய்த்தொற்று ஏற்படுகிறது,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


தலைநகர் டில்லியில் அக்டோபர் - பிப்ரவரி மாதங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவது வழக்கம். காற்றின் தரக் குறியீடு 50 புள்ளிகள் வரை இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான நிலை என, வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 350க்கும் மேல் பதிவாகி, மிகவும் மோசம் என்ற நிலையில் உள்ளது. இதை தடுக்க, மாநில பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்நிலையில், டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று கூறியுள்ளதாவது:



டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இங்கு, நான் இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை. உடனே நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. டில்லி ஏன் காற்று மாசால் தத்தளிக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும்.


வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, 40 சதவீத காற்று மாசு ஏற்படுவது உண்மைதான். குறிப்பாக பெட்ரோல், டீசலால் இந்த மாசு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் 22 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறோம்.


இது என்ன தேசியவாதம்? இன்றைய தேசியவாதத்தின் மிகப்பெரிய வடிவம், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதும், அதன் இறக்குமதியை குறைப்பதும்தான். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லாதது கவலையளிக்கிறது. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு, ஒரு சுயசார்பு இந்தியாவை உருவாக்க முடியாதா? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement