ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க பலே திட்டம்: மோப்பம் பிடித்தது மத்திய உளவுத்துறை
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு சராசரியாக, 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி முடிவு செய்துள்ளதாக, மத்திய உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில், நான்கு கட்சிகள் இடையே போட்டி உருவாகியுள்ளது. இதனால், வாக்காளர்களை, 'கவனித்தால்' மட்டுமே வெற்றி கிடைக்கும் என, ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி கருதுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின், பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக, 2.5 - 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, தொகுதி முழுதும் பாரபட்சமின்றி வாக்காளர்களை கவனிப்பு செய்வதற்கான வியூகத்தை, அக்கட்சி வகுத்துள்ளது.
அதன்படி, ஒரு சட்டசபை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சராசரியாக, 2 லட்சம் பேருக்கு தலா, 2,000 ரூபாய் வீதம் ரொக்க பணம் வழங்க முடிவு எடுத்துள்ளது. இதற்காக, ஒரு தொகுதிக்கு 40 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்துள்ளது.
அதில், 20 கோடி ரூபாயை கட்சி தலைமையே நேரடியாக வேட்பாளர்களுக்கு வழங்கும்; வேட்பாளர் தன் பங்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள, 10 கோடி ரூபாயை கட்சி தலைமைக்கு நெருக்கமான, 'பசையான' நபர்கள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பணத்தை எடுத்து சென்றால், பறக்கும் படையினர் பிடித்து விடுவர் என்பதால், தற்போதே பணம் அனுப்பப்பட்டு வருகிறது. அந்தப் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஆங்காங்கே இருக்கும் மாவட்டச் செயலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப, தேர்தல் நெருக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மா.செ.,க்கள் குறிப்பிட்ட வேட்பாளர்களிடம் தந்து, அதை உரிய முறையில் பட்டுவாடா செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தேர்தலுக்குப் பின், கட்சித் தலைமைக்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கும் தலைமை, பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஆங்காங்கே கட்சியினரை நியமித்துள்ளது.
இப்படி பணப்பட்டுவாடா தொடர்பாக ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மோப்பம் பிடித்திருக்கும் மத்திய உளவுத்துறை போலீசார், அதை துறை மேலிடத்துக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளனர்.
அவ்வறிக்கை, தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சென்றுள்ளது. அதனால், மத்திய அரசும் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சியின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்கத் துவங்கி உள்ளது.
தேர்தல் நெருக்கத்தில், உளவுத்துறையின் அறிக்கை, உள்துறை வாயிலாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு, ஜெயிக்க வாய்ப்புள்ள அந்த கட்சியின் திட்டத்தை தவிடு பொடியாக்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் டில்லி உள்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
-நமது நிருபர்-
மேலும்
-
இளைஞரணியில் இருந்து 40 வேட்பாளர்கள்: வீட்டில் விருந்தளித்து தேர்வு செய்த உதயநிதி
-
‛'சிக்கந்தர் மலையை' தகர்க்க முடியாது': மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆத்திரம்
-
24 ஆண்டாக தொடர்ந்து பயணிக்கும் டில்லிமெட்ரோவின் முதல் ரயில்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 10 ஆண்டில் ரூ.300 லட்சம் கோடியாக உயரும்: இக்ரா ஆய்வறிக்கையில் தகவல்
-
போரக்ஸ்: நிலைபெற்று வரும் ரூபாய் மதிப்பு