மின்சார வாகன பேட்டரியின் மறுசுழற்சியை உறுதிப்படுத்த வருகிறது தனி ஆதார் எண்

1

புதுடில்லி: மின்சார வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கான அதிக திறன் கொண்ட பேட்டரிகளின் மறுசுழற்சியை உறுதிப்படுத்த, 'பேட்டரி பேக்' ஆதார் எண் என்ற அடையாள குறியீட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

நம் நாட்டில் மின்சார வாகன துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. போக்குவரத்துக்கான கார்கள் மட்டுமின்றி சிறிய சரக்கு லாரிகளும் மின்சார வாகனமாக மாறி வருகின்றன.

இந்த மின் வாகனங்களின் இதயமாக லித்தியம் அயான் பேட்டரிகள் உள்ளன.

க்யூ.ஆர்., குறியீடு இதில் போலி பேட்டரிகளை தடுப்பது, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பது, மறுசுழற்சியை ஊக்குவிப்பது, சுழற்சி பொருளாதாரத்தை ஆதரிப்பது ஆகிய நோக்கங்களுக்காக ஒவ்வொரு பேட்டரிக்கும், குடிமக்களுக்கு வழங்குவதை போன்றே ஆதார் எண் குறியீட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு, 'பேட்டரி பேக் ஆதார்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆதார் எண் 21 இலக்கங்களை கொண்டிருக்கும். அது க்யூ.ஆர்., குறியீடு முறையில் பேட்டரியில் ஒட்டப்பட்டிருக்கும்.

அதை, 'மொபைல் போன்' மூலம் 'ஸ்கேன்' செய்தால் பேட்டரியை உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயர், பேட்டரி பற்றிய விபரம், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

அதுமட்டுமின்றி பேட்டரியின் ஆரோக்கியம், வெப்ப நிகழ்வுகள், சார்ஜ் ஏற்ற இறக்கம், அதன் இறுதி நிலை பற்றிய தகவல்களும் தொடர்ந்து கிடைக்கும்.

இவற்றை உற்பத்தியாளர்கள், சர்வீஸ் மையங்கள், மறுசுழற்சியாளர்கள் மட்டுமே அணுக முடியும்.

செயற்கை நுண்ணறிவு இந்த தகவல்களை பராமரிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பேட்டரி மேலாண்மை அமைப்பு என்ற டிஜிட்டல் அமைப்பை உருவாக்க உள்ளனர். இவை மின்சார வாகனத்தின் தரவு தளத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement