தலைவாழை இலையில் 'புல் மீல்ஸ்'

தலைவாழை இலை விரித்து அருஞ்சுவை பந்தி போல், ஒவ்வொரு நாளும் ஓர் அசத்தல் 'புல் மீல்ஸ்' படைக்கும் தினமலருக்கு என் இதயம் கனிந்த வணக்கம்!

75வது ஆண்டில் மார்க்கண்டேய சிரஞ்சீவியாக தமிழ் உள்ளங்களை வென்றெடுத்து வரும் தினமலரே வாழ்க! பல்லாண்டு வாழ்க!

அன்றைய முக்கியச் செய்தி நெத்தியடியாய் ஒற்றை வரி! காலைக் காப்பியை விடச் சூடாக, சோம்பலை உதறி என்னை எத்தனை நாள் விழித்தெழச் செய்தது!

அரசியல், தமிழகம்...என பக்கத்திற்கு ஓரு சுவை. டீக்கடை பெஞ்ச், பக்க வாத்தியம்...என பக்கத்திற்குள் பல சுவைகள்!

சிந்தனைக்களம்: தமிழகம் அறிய வேண்டிய சிந்தனையாக இருப்பின் அதனை வெளிக்கொணரும் ஆதரவு பகுதி! என் கருத்தும் அங்கே பரிமாறப்பட்டதுண்டு!

வியாபாரச் சினிமா, கவர்ச்சி, கிசுகிசு எங்கே?

கலை ஆதரிப்பாய் கலப்படத்திற்கு இடமில்லையோ என எண்ணியதுண்டு... ஆனால் அதுவே தினமலரின் தனித்தன்மை!

கிளாமர் தூசிக்கு அடிமையாகாமல், கலைக்கு மட்டும் கோயில் எழுப்பும் கோபுரமாய் நிற்கும் தினமலர்...

அதனாலேயே என்றும் தூய்மையான தமிழ் மணம்!

பத்திரிகை சித்தாந்தத்தை தாண்டிய மனிதநேயம்!

ஒரு சான்று: தூய்மைப் பணியாளர்களின் பசி அறிந்து, தொடர் எழுத்தால் அரசையே வழிக்குக் கொண்டுவந்து பசியாற்றிய பெருமை தினமலருக்கே உண்டு!

ஆண்-பெண், இளையோர்-மூத்தோர், அரசியலர்-தொழிலதிபர், வியாபாரி-விளையாட்டு ரசிகர் என யாவர்க்கும் ஒரே நாளிதழில் பல நாளிதழ் சுவை!

நேரலை தொலைக்காட்சியால் இருளாமல், இணைய சுனாமியில் மூழ்காமல், சமூக வலைதள காட்டாற்றில் அடித்துச் செல்லப்படாமல், இன்றும் புதுப்பொலிவுடன் இளைய தமிழ் காவலனாக நிற்கும் தினமலரே...தமிழே!

வையம் உய்ய வந்த மலரே தினமலர்

துய்ய நெறி தவறாது - ஐயா

நூறாண்டு காண் நும்மை நான் வாழ்த்தி

வாழ்நாள் நன்றி வணங்குகிறேன்!



நேசத்துடன்,



இரா.அர்ஜுனமூர்த்தி

மாநில அமைப்பாளர், பா.ஜ.,

Advertisement