ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை: சச்சின் பைலட்
சென்னை: ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை,'' என, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் சச்சின் பைலட் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது.
இங்கு எங்கள் கட்சிக்கு பாரம்பரிய ஆதரவும், ஓட்டு சதவீதமும் உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு தமிழகத்தில் எப்போதுமே ஆதரவு கிடையாது. எத்தனை தேர்தல் நடந்தாலும், பா.ஜ.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியைத்தான் தழுவும். இதனால், தமிழகத்தில் பா.ஜ., என்றைக்கும் கால் ஊன்ற முடியாது.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து, ஆழமான விவாதங்கள் நடக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது, பல கட்சி களும் கேட்பது தான். அதேபோல தான், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கேட்கின்றனர்; அதில் தவறு ஒன்றும் இல்லை.
தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்கு தான் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என சொல்கின்றனர்.
என்ன நடந்தாலும் சரி. வருங்காலத்தில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில், காங்கிரஸ் இடம் பெறும் கூட்டணி உறுதியாக உள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. அரசின் செயல்பாட்டை எல்லா மக்களும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
ஆனால், மத்திய அரசு நியாயமாக நடக்கவில்லை. நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விஷயத்தில் பாரபட்சம் காட்டுகிறது. மாநில அரசுகளை சமமாக நடத்தவில்லை .
இவ்வாறு கூறினார்.