த.வெ.க., தேர்தல் பிரசார குழுவில் பிரசார செயலருக்கு இடம் இல்லை

1

சென்னை: சட்டசபை தேர்தலில், த.வெ.க., பிரசார பணிகளை மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவை, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, 10 பேர் குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழுவில், பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு செயலர் ஆதவ் அர்ஜுனா, தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதீன் என்கிற நியாஸ், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இருப்பர்.

அனைத்து தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம், பிரசார கூட்டங்களை நடத்துவது தொடர்பான பணிகளை, இக்குழு மேற்கொள்ளும். த.வெ.க.,வினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரசாரக்குழுவில், த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார், த.வெ.க., பிரசார செயலர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.

Advertisement