பாதாள சாக்கடை பள்ளத்தில் பறிபோன 4 வயது சிறுவன் உயிர்; அரசுக்கு நயினார் கண்டனம்

1

சென்னை: நாமக்கல்லில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு தண்ணீர் தேங்கிய 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என தமிழக பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.



நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரோகித் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தான்.


நாமக்கல் மாநகராட்சி சார்பில், ரோகித் பெற்றோரிடம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. மணிகண்டன்- ரதிபிரியா குழந்தை உயிரிழந்த சோகத்தில் கதறி அழுத சம்பவம் கண்கலங்க வைத்தது. சிறுவன் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அலட்சிய திமுக அரசு!



இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசின் மெத்தனப்போக்கால் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிஞ்சுக் குழந்தைக்கு திமுக அரசு அலட்சியம் எமனாக வந்தது.


ஆட்சி முடிய மூன்று மாத காலம் மட்டுமே இருக்கும் வேளையில், கணக்கு காட்ட அவசரகதியில் செய்யும் வேலைகளிலும் அலட்சியம் காட்டி, உருப்படியாகச் செய்யாமல், வாழ வேண்டிய பச்சிளம் பிள்ளைகளின் உயிரைக் காவு வாங்குவது தான் முதல்வர் ஸ்டாலினுக்கு நாடு போற்றும் நல்லாட்சியா?

இது நிச்சயம்



தனது அலட்சியப்போக்கால் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது போதாதென்று, ஆட்சி முடியும் தருவாயில் குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் அரக்கனாக மாறிவரும் திமுக அரசை மீண்டுமொருமுறை அரியணை ஏற இனி என்றும் தமிழக மக்கள் விடமாட்டார்கள்! இது நிச்சயம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement