'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'

ராமேஸ்வரம்: ''சீக்கிய மத குருவான குருநானக் ஜாதி, மத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்தவர். அவருக்கு அடுத்தாண்டு பெரிய அளவில் விழா எடுக்க வேண்டும், '' என, கவர்னர் ரவி பேசினார்.

சீக்கிய மதத்தின் முதல் குருவான குருநானக் ராமேஸ்வரத்திற்கு வந்தததன் நினைவாக அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டு சென்னையில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் சங் சபா நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. இங்கு பொங்கல் விடுமுறையின்போது குருநானக் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ஜன.,13 முதல் 15 வரை பிறந்த நாள் விழா நடந்தது. நேற்று விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 10:00 மணிக்கு ராமேஸ்வரம் வந்தார். கவர்னருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

காலை 11:00 மணிக்கு நடந்த விழாவில் கவர்னர் பங்கேற்றார். குருத்வாரா மடம் கவர்னருக்கு வீர வாள், குரு நானக் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன. சென்னை, ராமேஸ்வரம் மடத்தின் பொதுச்செயலாளர் ஹர்விந்தர் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விழாவில் கவர்னர் பேசியதாவது: சீக்கியர்களுக்கு மட்டுமின்றி குருநானக் ஜாதி, மதம், பேதமின்றி அனைவருக்கும் சேவை செய்துள்ளார். அவரை எனக்கு சிறு வயது முதலே பிடிக்கும். எனது மனைவியும், நானும் பாட்னாவில் குருநானாக் மடத்திற்கு சென்று அடிக்கடி வழிபடுவோம்.

புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். குருநானக் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அடுத்தாண்டு இவ்விழாவை அனைவரும் பங்கேற்கும் வகையில் மகா உற்ஸவமாக கொண்டாட வேண்டும் என்றார்.

மடத்தின் நுழைப்பகுதியில் உள்ள குரு நானக் காலடியை கவர்னர் ரவி தரிசனம் செய்தார். மதியம் 12:50 மணிக்கு காரில் புறப்பட்டு துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை சென்றார்.

Advertisement