நெல்லையப்பர் கோவிலில் 35 ஆண்டுக்குப் பிறகு புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்!

4

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 35 ஆண்டுக்கு பிறகு புதிதாக தயார் செய்யப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித் தேர் இருந்தது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூரம் உத்திரம், அஸ்தம் நட்சத்திர தினங்களில் சிவலிங்க பூஜை மேற்கொண்டு பஞ்சமூர்த்திகளை வெள்ளி தேரில் வைத்து திருவீதி உலா அழைத்துச் செல்வது வழக்கம். 1991ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி வெள்ளி தேர் தீக்கிரையானது. உருகிய வெள்ளியும் காணாமல் போனதால் சர்ச்சை ஏற்பட்டது.

மீண்டும் வெள்ளித்தேர்



அதன் பிறகு புதிய வெள்ளித்தேர் செய்யும் பணி கிடப்பில் கிடந்தது.
கடந்த 2023-24ம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் பணிகள் நடக்கும் என அறிவிப்பை வெளியிட்டார்.

பிப்ரவரியில் தேர் செய்யும் பணிகள் துவங்கியது. 18 அடி உயரம் மற்றும் எட்டு அடி அகலத்திலான தேக்கு மரத்தில் மரத்தேர் பணி நடந்தது. அதன் பிறகு உபயதாரர்கள் தந்த வெள்ளியின் மூலம் 427 கிலோ வெள்ளியைக் கொண்டு வெள்ளித்தேர் பணி நடந்து முடிந்துள்ளது.


பஞ்ச மூர்த்திகளான சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் விநாயகர், முருகர் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்கள் இத்தேரில் வலம் வருவர். தேருக்கே உரிய சிற்ப கலை நயத்துடன் தேரினை நாகர்கோவில் மயிலாடி கல்யாணசுந்தரம் ஸ்தபதி மற்றும் மதுரை நாச்சியப்பன் ஸ்தபதி குழுவினர் கடந்த ஒன்றரை ஆண்டாக மேற்கொண்டனர்.

முதல்வர் அறிவிப்பு


கடந்த டிசம்பர் 20ல் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழாவிற்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், 2026 ஜனவரியில் வெள்ளித் தேர் வெள்ளோட்டம் நடக்கும் என அறிவித்தார்.


அதன்படி நேற்று ஜனவரி 2ல் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நடந்தது.
நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாளை. எம்.எல்.ஏ அப்துல்வகாப், கலெக்டர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, கோயில் செயலாளர்கள் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாலை 6:30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நெல்லையப்பர் கோவில் 4 ரத வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

Latest Tamil News

இந்நிகழ்ச்சியில் ஹிந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் இதுவரை 3,967 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் மட்டுமே இருந்த 'பெருந்திட்ட வரைவு' என்ற திட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.400 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


நெல்லையப்பர் கோவிலில் பூட்டிக் கிடந்த ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கருஉருமாரி தெப்பம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் புதிதாக மின்விளக்குகள் அமைக்க திட்டப்பணிகள் துவங்கப்படும். சொல்வதை செய்கிற அரசு என்பதற்கு நெல்லையப்பர் கோவிலின் வெள்ளித் தேர் சாட்சியாக உள்ளது.
இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்ற பிம்பத்தை சிலர் உருவாக்க முயல்கிறார்கள். அத்தகைய பிம்பம் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது. திராவிட மாடல் அரசு மக்களை மட்டுமல்ல, கடவுளையும் 'லிப்டிங்' செய்யும் அரசு ஆக உள்ளது.

சாலை மட்டத்திற்குக் கீழே இருந்த 25 கோவில்கள் கண்டறியப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் 14 கோவில்கள் லிப்டிங் செய்யப்பட்டுள்ளன. 15வது கோவிலில் லிப்டிங் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த கோவிலின் கோபுரத்தையும் லிப்டிங் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.


நெல்லையப்பர் கோவிலுக்கு யானை கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற பின், விரைவில் யானை நெல்லையப்பர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். இதற்காக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபயதாரர் தயாராக உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நன்றி



திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா கூறுகையில், "35 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்தேர் பணிகள் முடிந்து வெள்ளோட்டம் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக உதவி அனைவருக்கும் நன்றி. சட்டசபையில் அறிவித்த முதல்வருக்கும் அதனை செயல்படுத்திய அமைச்சருக்கும், உபயோதாரர்களுக்கும் நன்றி," என்றார்.

தேர் பணிகளை கடந்த ஒன்றை ஆண்டுகளாக மேற்கொண்ட ஸ்தபதி நாச்சியப்பன் கூறுகையில், ''நான் திருவேற்காடு திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளேன். நெல்லையப்பர் கோவிலில் நடந்த வெள்ளித் தேர் பணி எனக்கு மிகவும் மன நிறைவாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது,'' என்றார்.

Advertisement