மஞ்சள் விலை ஒரு மாதத்தில் குவின்டால் ரூ.2,000 உயர்வு

ஈரோடு: ஈரோட்டில் மஞ்சள் விலை ஒரு மாதத்தில், குவின்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹராஷ்டிரா உட்பட பல பகுதிகளிலும் மஞ்சள் இருப்பு, பழைய மஞ்சள் குறைவாக உள்ளது. ஆனால், தேவை அதிகரித்துள்ளது.

புதிய மஞ்சள் அதிகமாக வரும் என எதிர்பார்ப்பு இருந்ததால், இரண்டு மாதத்துக்கு முன் விலை உயர்ந்தது.

ஆனால் வடமாநிலங்களில் மழை, தரம் குறைவு போன்றவற்றால் விலை உயரவில்லை. இதனால், இருப்பு மஞ்சளை விவசாயிகள் விற்க தொடங்கியுள்ளனர். கடந்த டிச., 1க்கு முன் குவிண்டால் விரலி, 8,800 - 14,500 ரூபாய், கிழங்கு, 7,800 - 13,300 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று முன்தினம், 16,500 ரூபாயாக விலை உயர்ந்தது. அதாவது, ஒரு மாதத்தில், 1,500 முதல், 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது சில பகுதிகளில் புதிய மஞ்சள் அறுவடை துவங்கி உள்ளது. தவிர ஏற்றுமதி வழக்கமானதைவிட, 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் வரும் ஏப்., மாதம் குவின்டால், 14,000 - 18,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த எதிர்பார்ப்பால் கையிருப்பில் உள்ள மஞ்சளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement