கோர்ட்டில் திரிணமுல் - ஈ.டி., மோதல்: கோபத்துடன் வெளியேறினார் நீதிபதி

33

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசும், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியதால் கடுப்பான நீதிபதி, வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து நீதிமன்ற அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து இங்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

சோதனை




ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின், திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும் உள்ளார்.


மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக, 2020ல் சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது. இதில் பெறப்பட்ட பணம் சட்ட விரோதமாக, ஐ - பேக் நிறுவனத்துக்கு கைமாறியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கொல்கட்டாவில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.


அதே போல, அந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இதை அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, போலீஸ் உயரதிகாரிகள் புடைசூழ, பிரதீக் ஜெயின் வீட்டுக்கு வந்து சில முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றார்.


இதை பார்த்த அமலாக்கத் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் குறுக்கிட்டதோடு, ஆவணங்களை முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றது தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி - அமலாக்கத் துறையினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர்.


இந்நிலையில், நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில், ஐ- - பேக் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் வீட்டில் நடந்த சோதனையை முதல்வர் மம்தா பானர்ஜி குறுக்கிட்டு தடுத்ததாகவும், அவர் மீது வழக்குப் பதிந்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரியும், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.


பிரதீக் ஜெயின் வீட்டில் நடந்த சோதனையின் போது அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி, ஆளும் திரிணமுல் காங்., உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த இரு வழக்குகளும், கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி சுவ்ரா கோஷ் முன் விசாரணைக்கு வந்தன.


அப்போது நீதிமன்ற அறையில் இருந்த திரிணமுல் காங்., வழக்கறிஞர்கள் - அமலாக்கத் துறை வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த நீதிபதி சுவ்ரா கோஷ், அமைதி காக்கும்படி இரு தரப்பையும் கேட்டுக் கொண்டார்.

எச்சரிக்கை




இதை மதிக்காமல் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நீதிமன்ற அறையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, “இந்த வழக்குகளுடன் தொடர்பு இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையை விட்டு ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும். இல்லை எனில், நான் வெளியேற வேண்டியிருக்கும்,” என, நீதிபதி சுவ்ரா கோஷ் எச்சரித்தார்.


எனினும், யார் உள்ளே இருப்பது, வெளியேறுவது குறித்து வழக்கறிஞர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. கடுப்பான நீதிபதி சுவ்ரா கோஷ், வழக்கை வரும் 14க்கு ஒத்திவைத்து, அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.



இதற்கிடையே, அமலாக்கத் துறையை கண்டித்து, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கட்டாவில் மாபெரும் பேரணி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.



@block_B@

அமித் ஷா வீட்டின் முன் எம்.பி.,க்கள் போராட்டம்



ஐ - பேக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து, தலைநகர் டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வீட்டை முற்றுகையிட்டு, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் மஹுவா மொய்த்ரா, டெரக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், விசாரணை அமைப்புகளை பா.ஜ., தவறாக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.,க்களை, டில்லி போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.block_B

Advertisement