தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு சீட் கேட்கும் ராமதாஸ்

சென்னை: தி.மு.க., அரசுக்கு திடீரென, 'ஐஸ்' வைக்கத் துவங்கி இருக்கிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். ஆளும் அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நான்கு ஆண்டுகளாக எதிர்த்து அறிக்கை கொடுத்தவர், 'ஸ்டாலின் ஆட்சி நன்றாக நடக்கிறது' என, பல்டி அடித்திருக்கிறார். தி.மு.க., கூட்டணியில் மகளுக்கு, 'சீட்' பெறும் நோக்கத்தில், அவர் இப்படி பேசத் துவங்கியிருப்பதாக பா.ம.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.



பா.ம.க., சார்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை, திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று காலை துவக்கி வைத்தார்.


பின், ராமதாஸ் அளித்த பேட்டி:
2006ல், ஆட்சியில் பங்கு கேட்க முடியும் என்ற சூழல் இருந்தபோதே, ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஐந்து ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவை தி.மு.க.,வுக்கு வழங்கினோம்.


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எதற்காக அன்புமணியை அழைத்து கூட்டணி அமைத்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை; பா.ம.க.,வின் பெயர், சின்னத்தை தக்கவைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.


த.வெ.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்துகிறோம் என்பது, கற்பனையான தகவல்; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.


வரும் சட்டசபை தேர்தலில் ஜி.கே.மணியும், ஸ்ரீ காந்தியும் போட்டியிடுவர். பா.ம.க.,வில் இரு அணிகள் கிடையாது. என் தலைமையில் ஒரேஅணிதான் உள்ளது. இவ்வாறு கூறினார்.



'வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ள கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், “அரசியலில் எதுவும் நடக்கும்; என்ன வேண்டுமானாலும் நடக்கும்; எதிர்பாராதது எல்லாம் நடக்கும். எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது,” என்றார்.

தொடர்ந்து அவரிடம், கருணாநிதி மொழியில், 'பழம் நழுவி பாலில் விழுந்தது போல் தற்போது நடக்குமா' கேட்டதற்கு, “ஏன் வாய்ப்பில்லை. இதை ஏன் கேள்வியாக கேட்கிறீர்கள். பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.


நேற்றைய பேட்டியின்போது, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளதாக ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக கூறினார்.



தி.மு.க., அரசு, 2021 மே 7ம் தேதி பொறுப்பேற்றது முதல், முதல்வர் ஸ்டாலின் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, 2,000க்கும் அதிமான அறிக்கைகளை வெளியிட்ட ஒரே தலைவர் ராமதாஸ் தான். அதிலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ராமதாஸ்.


இப்போது மகன் அன்புமணியை, கூட்டணியில் அ.தி.மு.க., சேர்த்துக் கொண்ட கோபத்தில் இருக்கும் ராமதாஸ், அதற்கு எதிரான தி.மு.க., கூட்டணியில் தனக்கு இடம் தேடுகிறார்.


அதன் வாயிலாக, அன்புமணியை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்ய முடியும் என்பதோடு, மகள் ஸ்ரீ காந்திக்கு 'சீட்' பெறவும் திட்டமிட்டுள்ளார்.


அதற்கான துவக்கம் தான், ராமதாசின் இந்த, 'ஐஸ்' மழை என்கிறது, அன்புமணி ஆதரவு பா.ம.க., வட்டாரம்.

Advertisement