நிலநடுக்க கண்காணிப்பு மையம் அரசு அனுமதிக்காக காத்திருப்பு
சென்னை: 'தமிழகத்தில் சென்ஸார்' வசதியுடன், நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம், அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது' என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை, வெள்ளம் போன்று நிலநடுக்கத்தால், பேரிடர் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுதும், நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள், பாதிப்புக்கான வாய்ப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிலப்பகுதிகள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 19 மாவட்டங்கள், நில நடுக்க வாய்ப்பு மிகக் குறைவு என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எட்டு மாவட்டங்கள் மிதமான வாய்ப்புள்ள பகுதிகளாகவும், 10 மாவட்டங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் நிலநடுக்க வாய்ப்பு என்ன என்பதை அறிந்து, அதற்கு ஏற்றபடி கட்டடங்கள் கட்ட வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்ஸார் வசதியுடன், நில நடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு, 2023ல் அறிவித்தது.
ஆனால், இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.
இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசின் நிறுவனங்கள் மட்டுமே, நிலநடுக்க பாதிப்பு விபரங்களை தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ளூர் அளவில், நிலநடுக்கம் குறித்த உணர் திறன் வசதியுடன், கண்காணிப்பு மையங்கள் அமைக்க, அரசு முடிவு செய்தது.
கடந்த, 2023ல், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அப்போது, தமிழகத்தில் மத்திய அரசு சார்பில், நிலநடுக்க உணர் திறன் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதனால், கண்காணிப்பு மையங்கள் அமையும் இடங்களை முடிவு செய்வதில், தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம், தஞ்சாவூர், துாத்துக்குடி, கோவை மாவட்டங்களில், மத்திய அரசு நிலநடுக்க உணர் திறன் மையங்கள் அமைக்க, இடம் தேர்வு செய்துள்ளது.
இந்நகரங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில், கண்காணிப்பு மையம் அமைக்க, இடம் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இது தொடர்பான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.