வாரியத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதை படிப்படியாக குறைக்கும் தொழிற்சாலைகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதை படிப்படியாக குறைத்து வருகின்றன. கடந்த, 2024 - 25ல் தொழிற்சாலைகளுக்கு, மின் வாரியம் விற்ற மின்சார அளவு, 2,364 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது.
தமிழகம் முழுதும், வீடு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின்சாரம் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான, மின் வாரியத்தின் மின் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது. அதிக மின் பயன்பாடு உள்ள பெரிய தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, உயரழுத்த பிரிவிலும், மின் பயன்பாடு குறைவாக இருந்தால், தாழ்வழுத்த பிரிவிலும், மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, 150 கிலோ வாட் வரை, தாழ்வழுத்த பிரிவிலும், அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும், மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
பெரிய ஆலைகளில் மின் பயன்பாடு அதிகம். எனவே, அவை, மின் வாரியத்தின் மின்சாரம் மட்டுமின்றி, சொந்த மின் நிலையங்களை அமைத்தும், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கியும், பயன்படுத்தி வருகின்றன. அனைத்து வகையிலும் சேர்த்து, 6.22 லட்சம் தொழிற்சாலைகள் உள்ளன. தாழ்வழுத்த பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, ஒரு யூனிட் மின் பயன்பாட்டு கட்டணம், 8.25 ரூபாய்; உயரழுத்த பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கான கட்டணம், 7.50 ரூபாய். இது அதிகம் என, தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள், மின் வாரியத்தின் மின்சாரம் பயன்படுத்துவதை, குறைத்து வருகின்றன. அதன்படி, தொழிற் சாலைகளுக்கு விற்கப்பட்ட மின்சாரம், 2024 - 25ல், 2,364 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இது, 2023 - 24ல், 2,435 கோடி யூனிட்களாகவும், 2022 - 23ல், 2,510 கோடி யூனிட்களாகவும் இருந்தது.
இது குறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், மின் வாரியத்தின் மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இது, தொழிற்சாலைகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள், சொந்த மின் பயன்பாட்டிற்காக, காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து, மின் வாரிய வழித்தடம் வாயிலாக எடுத்து வந்து பயன்படுத்துகின்றன. இதற்கான, மின் வழித்தட கட்டணத்தையும் ஆலைகள் செலுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை