இடைநிலை ஆசிரியர்கள் 9ம் நாளாக போராட்டம்

சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி, சென்னையில் நேற்று ஒன்பதாம் நாளாக, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில், அரசு துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை பரிசீலித்து, உரிய ஆய்வுகள் மேற்கொள்ள, சிறப்பு குழு ஒன்றை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023ல் அறிவித்தார்.

அந்த குழுவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களை, தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒன்பதாம் நாளாக, நேற்று சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர்.

தங்களின் கண்களில், கருப்பு துணி கட்டி, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களின் குழந்தைகளும், கோரிக்கை பதாகைகளை, கையில் ஏந்தி பங்கேற்றனர்.

போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்; பின், மாலை விடுவித்தனர்.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறுகையில், ''இடைநிலை ஆசிரியர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement