மாவட்டத்தில் நெல் கிட்டங்கிகள் அமைப்பது...எப்போது:மத்திய அரசு நிதியில் செயல்படுத்த எதிர்பார்ப்பு

விருதுநகர்: மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.300 கோடிக்கு நெல் கிட்டங்கிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை விரைந்து செயல்படுத்தி அடுத்த மழைக்குள் விருதுநகர் மாவட்டத்திற்கென நெல் கிட்டங்கி ஏற்படுத்த வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழகத்தில் டிச. மாதம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.332.46 கோடிக்கு மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதே நேரம் நவ.ல் மத்திய அரசு சார்பில் நெல் கிட்டங்கிகள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி என்ன ஆனது என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் கேட்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திராஜா வேளாண்துறையிடம் மனு அளித்துள்ளார்.

இந்த நிதியை சுட்டிக்காட்டி நெல் கிட்டங்கிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் தென் மாவட்டங்களான தென்காசி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி,தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில்நெல் விவசாயம் அதிகளவில் நடக்கிறது.

மாவட்டங்கள் தோறும் நெல் கிட்டங்கிகள் வேண்டும் என தென் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே நுகர்பொருள் வாணிப கழக நிதியோடு, மத்திய அரசின் நிதியையும் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்திற்கென நெல்கிட்டங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது.

இம்மாதம் நெல் கொள்முதல் வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும். முந்தைய ஆண்டுகளில் கொள்முதலின் போது பயிர்கள் நனைந்து முளைத்து போயின. இனி வரும் காலங்களில் அந்த நிலை ஏற்படக் கூடாது.நிலையான உற்பத்தியை நெல்லில் அதிகரிக்க அதன் பாதுகாப்பு அம்சம் முக்கியம். அது விவசாயிகளுக்கு தொடர் நடவு செய்ய ஊக்கமும் அளிக்கும். எனவே மத்திய அரசு நிதியில் மாவட்டத்தில் நெல் கிட்டங்கியை செயல்படுத்த வேண்டும்.

Advertisement